காப்பகம்

நாதஸ்வரத்தில் திரைப்பாடல்

வரியந்தோரும் நடக்கும் யாழ்ப்பாணக் கோவில் திருவிழாக்களில் தவில் நாதசுர கச்சேரிகள் சகஜம். கோயில்களுக்கேற்ப 10, 15,25 நாட்களென திருவிழாக்கள் தொடரும். திருவிழாக் கடைசி நாட்களில் முக்கியமாக சப்பறம், தேர், தீர்த்தம் , பூங்காவனம் போன் ற  திருநாட்களில் பல தவில் நாதஸ்வர வித்துவான்கள் கச்சேரிக்கு வருவார்கள்.  இவர்கள் கச்சேரி, கடைசியில் மேளச் சமாவுடன் முடிவு பெறும்.

பிரசித்தி பெற்ற யாழ்  நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாக்களில் 23ம் நாள் தேர் உற்சவம் நடைபெறும். காலையில் தேர் இழுத்த பிற்பாடு,  பிற்பகலில் சாமி இறக்குவதற்கு முன் தவில் /நாதஸ்வரக் கச்சேரி  மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்.  இது இலங்கை வானொலியில் அநேகமாக ஒலிபரப்பப்பட்ட காலமும் உண்டு. (தற்போதய நிலை தெரியாது).

கிராமப்புற கோவில் திருவிழாக்களில் தவில் கச்சேரிக்குப் பின்னால்  “சின்ன மேளம்” நடனக்குழு, பொப் இசை பாடல் குழு என இத்தியாதி இத்தியாதி. இதற்காக இரசிகர் கூட்டம் பல தூர இடங்களில் இருந்து படையெடுக்கும். இதைவிட இலங்கை இந்திய புகழ் பெற்ற யாழ் மகன்  தட்சனாமூர்த்தியின் கச்சேரிக்கு சொல்லவா வேண்டும். தவில் மேதையை பார்ப்பதற்கென்றே மக்கள் கூட்டம் வாரி வாரியாக வந்திறங்கும்.

சிறுவயதில் மீசாலையில்  வெறுங்கால்களுடன் மணல் வீதிகளை உலாத்தி  வெள்ளை மாவடி பிள்ளையார் கோவில் திருவிழாக்களை பார்த்த காட்சி இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.  சாவகச்சேரி நாதஸ்வர  வித்துவான் ஸ்ரீ பஞ்சாபிகேசன், கோண்டாவில் பாலக்கிருஷ்ணன் நாதஸ்வர சகோதரர்கள், தவில் கணேசன், கானா மூர்த்தி – பஞ்சமூர்த்தி சகோதரர்கள் இப்படிப் பலப் பல கலைஞர்கள்….

இக்கோவிலில் பல  தவில் கச்சேரிகள் நடைபெறும். மாலை 6 மணிக்கு  தொடங்கும் கோலாகலம் விடிய விடிய தொடரும்.ஒரு தவில் நாதஸ்வர குழுவிற்கு சுமாராக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். கச்சேரிகள் கடவுள் வாழ்த்துடன் ஆரம்பித்து கீர்த்தனைகள் வாசித்து கடைசி 10 – 15 நிமிடங்கள் திரைப்பட மெட்டிற்கு ஒதுக்கப்படும். இளவயது ரசிகர்களுக்கு இது மிகவும் பிடித்தமான நேரம். நடுச் சாமத்தில் பாதி கண் மூடி கோழித்தூக்கம் போட்டவர்கள், கச்சான் கொறித்துக் கொண்டிருப்பவர்கள், ஊர்க்கதை அலட்டிக் கொண்டிருப்பவர்கள்  எல்லாம்  நாதஸ்வரத்தில் திரைமெட்டு தொடங்கியவுடனேயே பரபரப்பாக விழித்துக்கொள்வார்கள், திரைமெட்டைக் கண்டு பிடித்தவுடனே கூட்டத்தில் கைதட்டல் தொடங்கிவிடும். தில்லானா மோகனாம்பாள், திருவிளயாடல் திரைப்படப் பாடல்கள், இதை விட சிங்காரவேலனடி தேவா, அதிசயராகம் (அபூர்வ ராகம்) போன்றமெட்டுக்கள் பிரபலம்.

இவையெல்லாம் பார்த்து பலவருடங்களாகி விட்டன. போர்க் காலங்களில் திருவிழாக் கச்சேரிகள் பகல் வேளையில் வைக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். யதேட்சையாக முகநூலில்  கீழ்வரும் காணொலியை பார்த்தவுடன்  பழைய நினவுகள் கொடி கட்டிப் பறக்கின்றன.  இந்தக் காணொலியும் யாழ்ப்பாணத்தில் குமரன் குழுவினர்களால் வாசிக்கப்பட்டது என்பது முகநூல் தகவல்கள். இதில் உள்ள நாதஸ்வர வித்துவான் வேறுயாருமல்ல. புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தியின் புதல்வன்! நான் கேட்டு ரசித்தது போல் நீங்களும் கேட்டு ரசியுங்கள்..

நன்றி: முகநூல்- தமிழ் வானம்

 

Advertisements

குருடன்  யானையை பார்த்ததைப் போல்……

உத்தம வில்லன் படம் வரு முன்னரே திரைப் படத்தை முழுமையாக இருந்து பார்தவர்கள் போல் சமூக வலைத்தளங்களில் பற்பல விமர்சனங்கள் – பார்த்தது என்னமோ விற்பனைக்காகவே வகையறுக்கப்பட்ட ட்ரய்லர்களும் (Trailers) படத்தில் இடம் பெறும் சில திரைப்பட பாடல்களும் மட்டும் தான்.

படத்தை இயக்கும் நடிகர் அவர் துறையில் சிறந்தவர் என்பதில் ஐயமே இல்லை. இதனால் அவரின் படைப்புககளுக்கு எதிர்பார்ப்புகள்அதிகம். அதற்காக குருடர்கள் யானையை பார்த்தது போல் படம் வரும் முன்னரே விமர்சனகளை அள்ளி வீச வேண்டுமென்பதில்லை.
அதை விட்டுவிட்டு திரைப்படம் வந்தபின் அதைப் பார்த்து விட்டு விமர்சனக்களை முழுமையாக எழுதினால் என்ன?

தற்போது யாரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுதிக் குவிக்கலாம் எனும் நிலை. விமர்சனங்களை எழுதவேண்டாம் என்று சொல்லவில்லை. எழுதுங்கள் ஆனால் முழுமையாக பார்த்து விட்டு எழுதுங்கள். யாருடய விமர்சனம் முதன் முதலில் தளத்தில் ஏற்றப்படுகிறது என்ற போட்டியை விட்டு விட்டு தரமான விமர்சனங்களை எழுதினால் எல்லோருக்கும் நன்மை உண்டு.

குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவருமுன்னரே கோழிக் குஞ்சுகளை எண்ணும் நிலை மறையவேண்டும்.

சபா- தம்பி
மார்ச் 22. 2015.

டுவிட்லாங்கர்(Twitlonger) இல்:

Read: குருடன் யானையை பார்த்ததைப் போல்……

கீறல்கள்- கமல் ஹாசன் (Two sketches of Kamal)

கமலுக்கு வயது  60!

நம்பவே முடியவில்லை.

இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

அந்தக் காலத்தில் கமல ஹாசன் மீது இருந்த டீன் ஏஜ் கிரேஸ் (teennage craze!)

யாழ்ப்பாணத்தில், கடந்த நூற்றாண்டின் எழுபதுகளின் மத்தியில் இருக்கும்.

கொஞ்சம் தமிழர்களின் நிம்மதியான காலம்.

எப்போதுமே MGR, சிவாஜி முகங்களை திரையில் பார்க்கும் அலுப்பு.

அதுவும் வயதில் முதிர்ந்தவர்கள் இளவயது நடிகைகளுடன் நெருங்கி நடிக்கும் காலகட்டம்.

ஒரே Dull!

அங்காங்கே பொங்கலுக்கு பயற்றம் பருப்பை சேர்த்தால் போல் முத்துராமன், ஜெய்சங்கர் படங்கள்.

இக் கால கட்டத்தில் ரசிகர்களிடையேயும் ஒரு திருப்பம்.

பிரபல நடிகர்களுக்காக படம் பார்க்காமல் இயகுநர்களுக்காக படம் ஓடத்தொடங்கிய நாட்கள். இதில் முதலிடம் பெற்றவர்கள் ஸ்ரீதர், கே. பாலசந்தர் போன்றோர்.

 

இந் நேரத்தில் தான்  தமிழ் திரையுலகில் ஓர் புதுமுகம்.

மிகவும் இளையவர்.

சிறு வேடங்களில் பலபடங்களில் தலை காட்டியவர்.

இளவயது பெண் ரசிகர்களுக்கிடயே பிரபலமாகிக் கொண்டிருந்தவர்.

யாழ்ப்பாணத்தில் முதல் முதலாக எனக்கு பார்க்க கிடைத்த அவருடைய படம்: அவள்-ஒரு-தொடர்கதை.

விகடகவியாக காந்திக் கண்ணாடியுடன் நடித்த பாத்திரம்.

 

 பாடல்:  கடவுள் அமைத்து வைத்த மேடை, படம்: அவள்-ஒரு-தொடர்கதை.

இப்படம் 75 – 76 களில் யாழ்-டவுன் பஸ் தரிப்பு நிலையத்திற்கு பக்கக்தில் உள்ள ராணி தியேட்டரில் ஓடிய நினைவு.

தியேட்டருக்கு முன் நடிகை சுஜாதாவின் மிகவும் பிரமாண்டமான கட்-அவுட் (wooden cut-out) அலங்காரம்.

சனிக்கிழமை மட்னீ ஷோ (matinee show) – சாம் மாஸ்டரின் கெமிஸ்ரி டியூஷன் கிளாஸ் முடித்து, (Sam Master’s Chemistry tuition class) சொந்தங்களுடன் சுண்டிக்குளியில் இருந்து பஸ் பிடித்து போய் பார்த்த நினைவு.

இப்படம் யாழ் தியேட்டர்களை எட்ட முதலே இள நடிகரின் தகவல்கள் வீரகேசரி, தினகரன் நாளிதழ்களில்  மிகவும் பிரபல்யம். விகடகவியின் முன்னேற்றம் அபூர்வராகத்தில் தொடங்கி, டொன்-டொ-டாங்க் சொல்லத்தான் நினக்கிறேன், மூன்று முடிச்சு, மன்மதலீலை எனப் பல…

அந்தக் காலத்தில் பொழுதுபோக்கு என்பது பேப்பர்கள் புத்தகம் வாசிப்பது, இலங்கை வானொலி கேட்பது அல்லது சினிமா பார்ப்பது தான். இதுவும், குடும்ப – பணப்பையின் பருப்பத்தை பொறுத்தே நிர்ணயம். இதனால் மாணவர்களுக்கு வகுப்பில் பகிரப்படும் இலவச, பிய்ந்துபோன குமுதம் ஆனந்த விகடன் போன்றவற்றிற்கு மிகவும் மவுசு.

 

நமக்கு அவ்வளவாக ஓவியம் ஓடாது.

இன்றும் நன்றாக நினைவிருக்கிறது- Botany பாடத்திற்கு பாவிக்கும் வீனஸ் பென்சிலைப் (Venus brand pencil) பாவித்து, கையில் அகப்பட்ட சஞ்சிகையில் இருந்த கமலின் உருவத்தைப் பார்த்து கீறிய  கோடுகள்.

ஒரு பக்கம் எழுதிய வெள்ளைத்தாளின் மறு பக்கத்தில்,

eraser ஆல் அழித்து அழித்து கீறிய நினவு.

அடுத்தநாள் வகுப்பில் கொஞ்சம் ஒவியத்தில் திகழ்ந்த வாசுகியின்- டிப்ஸ் (tips) இல் சரியானது எனது மாஸ்டர் பீஸ் (Master piece).

இது trace செய்த கீறல்கள் அல்ல. பென்சிலின் அடிப்பகுதியை வைத்து சிறிது சிறிதாக அளவெடுத்துக் கீறியது.

 

பென்சில் கீறல்கள் (இளவயதுக் கமல்)

பென்சில் கீறல் (40  வருடங்களுக்கு முன்பு)

பென்சில் கீறல் (40 வருடங்களுக்கு முன்பு)

விஷயம் என்னவென்றால் இப்படி வரைந்த எனது சில கீறல்கள் சில  புத்தகங்களுடன்  அவுஸ்திரேலியாவிற்கு 28 வருடங்களின் முன்பு பயணப்பட்டுவிட்டன.

கீறியது கிடத்தட்ட 40 வருடங்களின் முன்பு.

 

சமீபத்தில் எனது பழைய பொட்டலங்களை தூசு தட்டும்போது கிடைத்த  இரு கீறல்களை நடிகரின் 60ம் பிறந்த நாளில் எனது பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

50 வருடங்களுக்கு மேல் எமக்கு திரையுலகம் மூலம் எல்லோருக்கும் களிப்பை தந்த கமல் ஹாசன் நடிகருக்கு எனது வாழ்துக்கள்.  மேலும் வயதுக்கு ஏற்ற நடிப்பை தொடர்ந்து ரசிகர்களுக்கு கொடுக்க முன்னாசிகள் பல.

 

நன்றி.

நொவம்பர் 7, 2014

உல்லாசம் பொங்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

ஊரெங்கும் ஒன்றாகக் கலந்து உறவாடும் தீபத் திரு நாளில்
எங்கிருந்தாலும்
பூப்போல சிதறும் மத்தாப்புக்களுடன்
 கொண்டாட, எனது  மனமுவந்த

தீபாவளி வாழ்த்துகள்!

அமரிக்காவில், பாலிவூட் (Bollywood) இசையுடன் உறைபனி சறுக்கல் நடனம்

உறைந்தபனியில் சறுக்கி விளையாடுவது குளிர்தேச நாடுகளில் ஓர் பொழுதுபோக்கு. சிறுவர்கள் உறைந்த பனி யை உருட்டி   அதற்கு மூக்கு, கண், காது  வைத்து  பனி மனிதனை  (ஸ்னோ மான் -snow man) செய்து விளையாடுவர்.

காலப்போக்கில் உறந்த பனியில் விசேஷ  காலுறை அணிந்து நடனமாடுவது (ice skating) ஓர் போட்டியாக மாறிவிட்டது.  இவ் நடனம் வின்டெர் ஒலிப்பிக் (Winter Olympics) போட்டிகளில் மிக மிக சிறப்பான அம்சம். ஒரு காலத்தில்  இங்கிலாந்தை சேர்ந்த  ஜேன் ட்ரோவில், கிரிஸ்டபர் டீன் ஜோடி  (Jane Trovill & Christopher Dean) பல ஆண்டுகளாக முடிசூடிய ஒலிபிக் வீரர்.

நான்கு வருடங்களுக்கு முன்,  அமரிக்க வீரர்களுக்கான போட்டியில் பங்கு பற்றிய ஜோடி  ஓர் புதுமையை செய்தது. கீழே தரப்பட்ட  சுட்டி அவர்கள் பாலிவூட் சினிமா இசையை (Bollywood music) பாவித்து  உறைபனி சறுக்கல் நடனத்தை ஆடி பலரது கைதட்டலை பெற்றிருக்கிறார்கள். பார்த்து ரசியுங்கள்.

புது வருட வாழ்த்துக்கள் (2014)

புதிய 2014 …

நலமுடன் நகர,

நண்பர்கள் யாவர்க்கும்

நல்லாசிகள் உரித்தாகுக!

புதிய வருடங்களோடு தொடர்புடைய சில திரைப்பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  கேட்டுத்தான் பாருங்களேன்!

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்…

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் உருவாகிய பாடலுக்கு குரல் கொடுத்தவர்கள்   P.B. ஸ்ரீனிவாஸ், S. ஜானகி

திரைப்படம் :  பொலீஸ்காரன் மகள்  (1962)

பாடல் : கவிஞர் கண்ணதாசன்

துரதிர்ஷ்டவசமாக  கடந்த ஆண்டு ராமமூர்த்தியும்,  P.B. ஸ்ரீனிவாஸும்  இயற்கை எய்திவிட்டார்கள். 😦 ஆயினும் அவர்களுடைய பாடல்கள் இன்னும்  ரீங்காரம் இட்டுக்கொண்டே  இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

இளமை இதோ இதோ..

எண்பதுகளில்   வெளிவந்த அட்டகாசமான பாடல், ஆங்கிலத்தில் வாழ்துக்கள் பாடி ஆரம்பிக்கிறது. இளம் கமலஹாசன்  நடனமாடும் பாடலில் ஆங்காங்கே அவர் நடித்த படங்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

பாடியவர்கள்; S.P. பாலசுப்ரமணியம் குழுவினர்

இசையமைத்தவர் :இளையராஜா

பாடல் : இளமை இதோ இதோ..

திரைப்படம்: குரு (1980)

தை மாதம் இல்லாமல் புதுவருடமா…?